கோவை, கொடிசியா அருகே பல நாட்களாகச் சுத்தம் செய்யப்படாமல் இருந்த வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவைக்கு வருகை தந்தார்.
இந்நிலையில் கொடிசியா – அவிநாசி பாலம் திறப்பு விழாவுக்குச் செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாறுகால் கால்வாய் தூர்வாரப்படாமல் இருந்துள்ளது. இதனால் பல நாட்களாக அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், முதல்வர் வருகையையொட்டி அனைத்தும் சுத்தம் செய்யப்படும் என எண்ணிக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஏனெனில் கால்வாயைச் சுத்தம் செய்வதற்கு பதிலாக ஊழியர்கள் அந்த இடத்தை முதல்வர் கண்களில் படாமல் இருக்க துணி கொண்டு மறைத்து வைத்துள்ளனர். ஊழியர்களின் இந்தச் செயல் தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.