தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுடன் முழு இராஜதந்திர உறவுகளையும் மீட்டெடுக்கும் நடவடிக்கையாக, காபூலில் உள்ள தனது தூதரகத்தை இந்தியா மீண்டும் திறக்கும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு
அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, 2021 ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இதனையடுத்து, ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள தூதரகத்தை இந்தியா மூடியது.
2022ம் ஆண்டில், காபூலில் உள்ள இந்திய தூதரகம், வர்த்தகம், மருத்துவ உதவி, மனிதாபிமான பணிகளுக்காக ஒரு தொழில்நுட்பக் குழுவுடன் கூடிய பணியகத்தை அமைத்தது. அதிகாரப் பூர்வமாகத் தலிபான் அரசை அங்கீகரிக்காத போதும், அடிப்படை உள்கட்டமைப்பு, உணவு, மருத்துவம், பேரிடர் நிவாரணம் எனச் சுமார் 500 கோடி ரூபாய்க்கும் மேல் இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம், துபாயில் மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியை, ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சரான அமீர் கான் முத்தாகி சந்தித்து பேசினார். ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு பொறுப்பேற்ற பிறகு இந்தியா- ஆப்கான் இடையே நடந்த முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத் தக்கது. கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குத் தலிபான் அரசுக் கண்டனம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அமீர் கான் முத்தாகி பஹல்காம் பயங்கர வாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருந்தார். கடந்த மாதம் ஆப்கானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு முத்தாகியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த ஜெய்சங்கர், ஆப்கான் மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்தார்.
அதன்படியே, ஆயிரம் கூடாரங்கள் மற்றும் 15 டன் உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி காபூலுக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமீர் கான் முத்தாகி, புதுடெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை நேரில் சந்தித்துள்ளார்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், ஒரு தாலிபான் அமைச்சர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று கூறியுள்ள ஜெய்சங்கர், இருநாடுகளும் வளர்ச்சிக்கான பொதுவான உறுதிப்பாட்டை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் இருநாடுகளுமே, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இரு நாடுகளுக்குமான நெருக்கமான ஒத்துழைப்பு ஆப்கானின் தேசிய வளர்ச்சிக்கும், பிராந்திய ஸ்திரத்தன்மைக்கும் முக்கிய பங்களிப்பை அளிக்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்தச் செயல்திட்டத்தின் முதல்படியாகக் காபூலில் இந்திய தூதரகம் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தான் இந்தியாவை தனது நெருங்கிய நண்பராகப் பார்க்கிறது என்று கூறியுள்ள முத்தாகி, டெல்லியில் இருப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிதலை அதிகரிக்கும் என்று நம்புவதாகவும், எந்தவொரு பயங்கரவாத குழுவும் ஆப்கானிஸ்தானை இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளார். சீனாவுடன் பாதுகாப்பு உறவைப் பேணிவரும் பாகிஸ்தான், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டிவருகிறது.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமானப் படை தளத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பாக ஆப்கானிஸ்தானுக்கு அவர் நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தை அமெரிக்கா கைப்பற்றும் என்ற ட்ரம்பின் எச்சரிக்கைக்கு இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணியில் ஆப்கான்- இந்தியா உறவு மேம்படுவது பாகிஸ்தானுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.