தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், கம்பு, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
போதிய வடிகால் வசதி ஏற்படுத்தாததுதான் இந்த பாதிப்புக்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மொத்த மழைநீரும் வயல்களில் குளம்போல் தேங்குவதுடன், வீடுகளையும் சூழ்ந்து கொள்வதாக வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள், கால்வாய் பகுதிகளை அரசு உடனடியாக தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கடமலைக்குண்டு – மயிலாடும்பாறை சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், சமயபுரம், நம்பர் ஒன் டோல்கேட், திருவெள்ளறை, சிறுகனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.