முந்தைய காங்கிரஸ் அரசு பின்தங்கிய மாவட்டங்களாக அறிவித்து, மறந்துபோன 100 மாவட்டங்களை, பாஜக அரசு லட்சிய மாவட்டங்களாக மாற்றியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு வேளாண் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
அங்கு விவசாயிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, வேளாண் துறையில் 35 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு மாபெரும் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
மேலும், 24 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பிரதமரின் தன் தான்ய விவசாயிகள் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பின்னர் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, நம் நாட்டின் முக்கிய அங்கமாக விவசாயம் திகழ்வதாகவும், காலம் மாறும்போது விவசாயத்திற்கு அரசின் ஆதரவு தொடர்ந்து கிடைப்பது மிகவும் முக்கியம் என்றும் கூறினார்.
மேலும், முந்தைய அரசாங்கம் விவசாயத்தை கைவிட்டதாக வேதனை தெரிவித்த அவர், விவசாயம் குறித்த எந்தப் பார்வையும் அந்த அரசிடம் இல்லை எனக் குற்றம்சாட்டினார்.
இந்திய விவசாயம் பலவீனப்பட இதுவே காரணம் எனக்கூறிய பிரதமர் மோடி, அதற்கான சீர்திருத்தம் 2014 பாஜக ஆட்சியில் தொடங்கியது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவின் விவசாய ஏற்றுமதி, தேன் மற்றும் முட்டை உற்பத்தி கடந்த 11 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகரித்துள்ளதாகவும், பால் உற்பத்தியில் நாம் முதலிடத்தில் இருப்பதாகவும் பிரதமர் மோடி பெருமைபட பேசினார்.