கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தவெக நிர்வாகி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவரும், தவெக நிர்வாகியுமான மரிய வில்சன் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டுமென ஒரு குழுவை அமைத்துள்ளார். அந்தக் குழுவானது பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க கரூர்ச் சென்றுள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுச்சாமிபுரம் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சுகன்யாவின் வீட்டிற்குச் சென்ற மரிய வில்சன், அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துச் சுகன்யாவின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.
பின்னர் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.