மதுரை மாவட்டம் தேனூர் சுந்தரவள்ளியம்மன் கோயில் திருவிழாவை நடத்தகோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனூர் கிராமத்தில் உள்ள சுந்தரவல்லி அம்மன் கோயிலின் புரட்டாசி திருவிழா கடந்தாண்டு முதல் அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தரப்பினர் நீதிமன்றம் சென்றதையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழுவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், அறநிலைத் துறை சார்பாகத் திருவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதனையடுத்து இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரைக் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்கவும், திருவிழா நடத்துவதற்கும் சோழவந்தான், ஜெனகை மாரியம்மன் கோயில் செயல் அலுவலரைச் சிறப்பு அலுவலராக நியமனம் செய்து இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி திருவிழாவை முளைப்பாரி நிகழ்வுடன் நடத்த கோரி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன.