கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடையே அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது என்றும், ஆளுங்கட்சி நீதிமன்றங்களை நாடுவதே இல்லை எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் நடத்துவதற்கான இடத்தில் அனுமதி தரவில்லை என்பதை ஆதாரத்துடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், தவெகவினர் கேட்ட ரவுண்டானா பகுதியை கொடுத்திருந்தால் நெருக்கடி ஏற்பட்டிருக்காது என்றும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் என பாடும்போது மின்சாரம் தடைப்பட்டு, லத்தி சார்ஜ் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய முதலமைச்சர், கரூர் கூட்டத்தில் லத்தி சார்ஜ் நடைபெறவில்லை என தெளிவுப்படுத்தினார். தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், கரூர் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்ததாகவும், செருப்பு வீசப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர், திட்டமிட்டு யாரும் செருப்பு வீசவில்லை என்றும், குடிநீர் கேட்டுதான் செருப்பு வீசியிருப்பதாக கருதுகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், அனைத்து விசாரணைகளும் சிபிஐ விசாரணையில் வெளிவரும் என முதலமைச்சர் கூறினார்.
பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டும் கூட்டத்திற்கு காவல்துறை போதுமான அளவு வருவதில்லை என்றும், இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஒரு காவலர் கூட உள்ளே வரவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், காவல்துறையின் கவனக் குறைவால்தான் கரூரில் அசம்பாவிதம் நடைபெற்றது என்பதை பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, பாஜக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.