கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கரூர் சம்பவம் குறித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கருத்துக்கு பிறகுதான் முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்றேன் என தெரிவித்தார்.
எதிர்க்கட்சி பேசிய பிறகுதான் முதலமைச்சர் பதில் அளித்திருக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சி தலைவரான தன்னை பேச அனுமதிப்பதாக கூறிவிட்டு முதலமைச்சரை பேச சபாநாயகர் அனுமதித்தார் என்றும் கூறினார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்றும், முதலமைச்சர் சொன்ன கருத்துக்கள் அனைத்தையும் நாங்கள் அமைதியாக கேட்டு கொண்டதாகவும் கூறினார்.
தவெக தலைவர் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பேசும் போது 10-வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டது என்றும், தமிழக அரசு உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், 41 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
கரூரில் தவெக தலைவர் கூட்டம் நடந்த இடத்தில் எத்தனை காவலர்கள் இருந்தார்கள்..? என்றும், அமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
அரசு, காவல்துறையின் அலட்சியத்தால்தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்ததாக மக்கள் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், கரூர் மருத்துவமனையில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்ய போதிய மேஜைகள், மருத்துவர்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
39 உடல்களுக்கு எப்படி இவ்வளவு வேகமாக உடற்கூராய்வு செய்ய முடியும்..? என்றும் 22 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டாலும் உடற்கூராய்வு செய்ய மேஜை எங்கு உள்ளன என்றும் அவர் வினவினார். கிட்னி திருட்டு வழக்கில் தமிழக அரசு அவசரம் காட்டாதது ஏன்..? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.