இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு… அதன் சிறப்பம்சங்கள் என்ன தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் 2019ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்கள், ரயில் பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்ததோடு, பயணிகளுக்குப் புதுமையான அனுபவத்தையும் வழங்கியது. தற்போது மூன்றாம் தலைமுறை வந்தே பாரத் ரயில்கள், பயணிகளுக்குச் சிறந்த சேவையை வழங்கி வரும் நிலையில், அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.O அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கை கூறியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற 16வது சர்வதேச ரயில்வே உபகரண கண்காட்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தே பாரத் ரயில்கள், தொழில்நுட்ப தரத்தின் அடிப்படையில், உலகின் சிறந்த ரயில்களுக்கு இணையாக இருப்பதாகக் கூறினார்.
வந்தே பாரத் 3.O ரயில்கள் மிகவும் வேகமானது, நவீனமானது என்றும், இது ஜப்பான், ஐரோப்பாவில் உள்ள ரயில்களோடு ஒப்பிடுகையில் வெறும் 52 வினாடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதாகவும் தெரிவித்தார்.
குறைந்த சத்தத்தையும், அதிர்வையும் வந்தே பாரத் ரயில்களில் உணர முடிவதாகக் கூறிய ரயில்வே அமைச்சர், இது தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட வேண்டும என்றும் கூறினார்.
அடுத்தக்கட்டமாக வந்தே பாரத் 4.O திட்டம் இன்னும் மேம்பட்டதாக நவீனத்துவமாக இருக்கும். புல்லட் ரயில்கள் போன்ற அதிவேக ரயில்களை இயக்க இந்தியாவில் பிரத்யேக வழித்தடங்கள் கட்டமைப்படும். புதிய வழித்தடங்களில் ரயில்கள் மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும்.
2047-ம் ஆண்டுக்குள் அதிவேக ரயில்கள் மட்டுமே இயக்கப்படக் கூடிய 7000 கிலோ மீட்டர் நீள வழித்தடங்கள் உருவாக்கவும், இந்தியாவின் ரயில் அமைப்பை முற்றிலும் மாற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.
வந்தே பாரத் 4.O ரயில்கள் மிகவும் நவீனத்துவமாக இருக்கும் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் இவ்வகை ரயில்கள் பிற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது இந்தியாவை ரயில் தொழில்நுட்பத்திற்கான உலகளாவிய மையமாக மாற்ற உதவும். ரயில் தயாரிப்பு, வடிவமைப்பு மற்றும் பொறியியலில் இந்தியாவின் வலிமையை அதிகரிக்க மத்திய அரசு விரும்புகிறது.
வந்தே பாரத் 4.O ரயில்கள் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுவதோடு, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.