சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில், எதனடிப்படையில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை பார் கவுன்சில் அலுவலகம் முன் ராஜீவ் காந்தி என்ற வழக்கறிஞர் மீது, கடந்த சில தினங்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, பார் கவுன்சில் தலைவருக்கு வழக்கறிஞர் பாலு கடிதம் எழுதியிருந்தார். இதனால் தனக்கு தொடர்ந்து மிரட்டல் வருவதால் காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பாலு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, எதனடிப்படையில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது? என்றும், சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவைக் கைப்பற்றி விசாரணை நடத்தி 2 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.