ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தியதுடன், பாகிஸ்தானுக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது… அது என்ன தற்போது பார்க்கலாம்…
உத்தரபிரதேசத்தின் சாஹரன்பூரில் அமைந்துள்ள மதராசாவின் பெயர்தான் தாருல் உலூம் தியோபந்த்… இதற்கும், தாலிபான்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது… தாலிபான் தலைவர்கள் பலரும், தியோபந்தின் உள்ள மதரசா போன்று வடிவமைக்கப்பட்ட பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மகாணத்தில் உள்ள தாருல் உலூம் ஹக்கானியாவில்தான் கல்வியை பயின்றனர்… இதை நிறுவிய மவுலானா அப்துல் ஹக் என்பவர் இந்திய பிரிவினைக்கு முன்னர் தியோபந்தில் கல்வி பயின்றவர். அவரது மகன் சமி உல் ஹக், தாலிபன் அமைப்பை உருவாக்கியதில் பெரும் பங்கு வகித்ததால், தாலிபானின் தந்தை என்று போற்றப்படுகிறார்….
சஹரன்பூரில் 1866ம் ஆண்டு அமைக்கப்பட்ட தியோபந்த் மதரசா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய போதனையில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றாக சொல்லப்படுகிறது..
இந்த நிலையில் இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, உத்தரபிரதேசத்தில் உள்ள தாருல் உலூம் தியோபந்திற்கு சென்றிருந்தார். பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவில் பிளவு ஏற்பட்ட தருணத்தில், முத்தகியின் வருகை, முக்கியத்துவம் பெற்றது… அவரது வேண்டுகோளின்படியே அங்கு விஜயம் செய்திருந்தார்.. இது முத்தாகியின் தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அரசியல் ரீதியாகவும், இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது…
முத்தகியை தியோபந்திற்கு செல்ல அனுமதித்தது, தியோபந்தில், ஹதீஸைக் கற்பிக்க அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியது போன்றவை பெண் கல்வி குறித்த பாகுபாட்டை களையும் இந்தியாவின் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது… ஏனெனில், தாருல் உலூம் தியோபந்த் கல்வியில் பாலினப் பாகுபாட்டை வலியுறுத்தி வந்தாலும், தாலிபானின் தீவிரவாத சித்தாந்தத்திற்கு மாறாக, பெண்களின் கற்கும் உரிமையை ஆதரிக்கும் ஃபத்வாக்களை வரலாற்று ரீதியாக வெளியிட்டு வருகிறது..,
கடந்த காலங்களிலும் இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களிடையே இந்தியா இதுபோன்ற மத ராஜதந்திரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது… 1995ம் ஆண்டு பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்குமபோது, முன்னாள் ஈரான் அதிபர் அக்பர் ஹமேஷி ரஃப் சஞ்சானி, ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும லக்னோவுக்கு விஜயம் செய்தார். பாரா இமாம்பராவில் 10 ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவின் மதசார்பின்மையை ஆதரித்து பேசினார். ஈரான் அதிபர் அக்பர் ஹமேஷி ரஃப் சஞ்சானியின் உரை, இந்திய முஸ்லிம்களிடையே பதற்றத்தை தணிக்க உதவும் சைகையாக கருதப்பட்டது…
தற்போது, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் உடன் இந்தியா காட்டும் நெருக்கம், பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது…