நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
மத்திய அரசிடம் கேள்வி எழுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆறு கேள்விகளை அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
2023-24ம் ஆண்டு CAG அறிக்கையின்படி, ஆயிரத்து 540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 ஆயிரத்து 808 கோடி நிதியை செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்? என்றும், மக்களிடம் வசூலிக்கப்பட்ட ஆயிரத்து 985 கோடி ரூபாய் மின்சார வரியில், 507 கோடியை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021-22 முதல் 2023-24 வரை மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28 ஆயிரத்து 24 கோடி ரூபாயில் 10 சதவீதத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பிய அண்ணாமலை, 511 தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை கூட நிறைவேற்றாமல் 2026 தேர்தலை சந்திக்க வெட்கமில்லையா? என்றும் வினவியுள்ளார்.
மேலும், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பதாக கூறிவிட்டு, சுமார் ஐந்து லட்சம் கோடி கடன் வாங்கியது ஏன்? என்றும், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.