முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA மைதானத்தில் தமிழக பாஜக தொகுதி அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பயிலரங்கு கூட்டம் நடைபெற்றது.
இதில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பயிலரங்கத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பொருளாளர் பைஜயந்த் பாண்டா, மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி வெற்றி பெற தாம் உழைக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதியை முதலமைச்சராக்கும் முயற்சியில் திமுக கூட்டணி ஈடுபட்டுள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியிலேயே போலி வாக்காளர்கள் ஒன்பதாயிரம் பேர் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைச் சீரமைக்கவும், ஊழலை ஒழிக்கவும், மாற்றம் தேவை என்கிற சூழலில் உள்ளதாகக் கூறினார்.
திமுக கூட்டணி இந்த முறை போலி வாக்காளர்களை வைத்துக் கொண்டு 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற நினைத்துக் கொண்டிருப்பதாகவும், அதனைச் சாத்தியமற்றதாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பேசுகையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அடுத்து எப்போது நடக்க போகிறது என்று தெரியவில்லை எனவும், அதனால் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடைபெறுவதே தமது நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், அடுத்த 100 நாட்கள் பாஜக மற்றும் தமிழகத்தில் முக்கியமான நாட்கள் என்றும் தெரிவித்தார்.
















