வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாமின் கீழ் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாகப் பெறப்பட்ட 49,429 கோரிக்கை மனுக்களில், 19,290 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது கவலையளிக்கிறது.
“விடுபட்டோர் எல்லோருக்கும் கண்டிப்பாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்த இரண்டு நாட்களுக்குள்ளேயே திமுக அரசின் சாயம் வெளுத்துவிட்டது என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் “தகுதியற்றவர்கள்” என்ற போர்வையில், சுமார் 40% மனுக்களை நிராகரித்து, நாலாப்புறமும் விளம்பரம் மட்டும் வெளியிட்டு, தமிழக மகளிரை ஏமாற்றுவது தான் உரிமைத் தொகையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பேற்று 28 மாதங்களுக்கு இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டது போதாதென்று, தங்கள் கணக்குப்படி “தகுதியான” மகளிர் ஒவ்வொருவருக்கும் ₹28,000 ரூபாயைத் தராமல் ஏமாற்றியது போதாதென்று, நாள்தோறும் மனு கொடுக்க கால்கடுக்க நிற்கவைத்து அலைக்கழித்தது போதாதென்று, மேடைதோறும் ஒரு போலி அறிவிப்பை வேறு வெளியிட்டு வஞ்சிப்பது ஏன்? எளியோரை ஏமாற்றி களித்தோருக்கு ஏமாற்றமே மிஞ்சும்! வெற்று அறிவிப்புகள் மூலம், மகளிரை நம்ப வைத்து ஏமாற்றிய பாவம் திமுக அரசை அழிவை நோக்கி இட்டுச் செல்லும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















