உலகின் முதல் டிரில்லியன் டாலர் மனிதராக டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். உலக மக்களின் பசியை தீர்க்கத் தேவையான பணத்தின் இரு மடங்குத் தொகை ஒரே நபருக்கு ஊதியமாகக் கிடைத்திருப்பது உலகளவில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் உலகின் பசியை முற்றிலும் ஒழிக்க, ஆண்டுக்குச் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாபெரும் தொகை டெஸ்லா நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்கின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பின் பாதியை விடக் குறைவு என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், அவரது இணை பங்குதாரர்களிடமிருந்து பெறவுள்ள பங்குகள் மற்றும் பங்கு விருப்பங்கள்மூலம் ஒரு டிரில்லியன் டாலர் தொகையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் டெஸ்லாவில் அவரது பங்குகள் இரட்டிப்பாகியுள்ள நிலையில், உலகின் முதல் டிரில்லியன் டாலர் மனிதராக எலான் மஸ்க் உருவெடுத்துள்ளார். உலகின் முதல் 10 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1.7 டிரில்லியன் டாலராக உள்ளது.
இந்நிலையில், மஸ்கிற்கு கிடைத்துள்ளதாகச் சொல்லப்படும் இந்த ஒரு டிரில்லியன் டாலர் தொகை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஹாங்காங், கத்தார், நியூசிலாந்து உள்ளிட்ட 170 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் முதல் முறையாக ஒரு தனி மனிதனுக்கு இந்த அளவு பெரிய தொகை கிடைத்துள்ளது.
மஸ்கிற்கு எதிராகப் பல்வேறு எதிர்ப்புகளையும் எழுப்பியுள்ளது. அத்துடன் இது உலக பொருளாதார சமநிலை குறித்த புதிய விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் போர்கள், பஞ்சங்கள், வறட்சி மற்றும் தொற்று நோய்களால் சூழப்பட்டுள்ள நிலையில், இத்தகைய தொகை உலக மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட்டால் அது எத்தனை நன்மை பயக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்லா நிறுவனம் இந்தப் பெரும் தொகையை நியாயப்படுத்தும் வகையில், நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள் எலான் மஸ்க் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது. அதே சமயம், அடுத்த 10 ஆண்டுகளில் 8.5 டிரில்லியன் டாலர் சந்தை மதிப்பையும், 400 பில்லியன் டாலர் லாபத்தையும் அடைவதே தங்கள் குறிக்கோள் என்றும் டெஸ்லா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ம் ஆண்டு வெளியான OXFAM அறிக்கையில், இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக ஒருவர் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. அடுத்த 12 மாதங்களுக்குள் அந்தக் கணிப்பின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டது. மற்றொருபுறம் கடந்த ஒரு தசாப்தத்தில் உலக வறுமை ஒழிப்பு மந்தமான நிலையில் உள்ளதாக உலக வங்கி எச்சரித்திருந்தது. இதற்குக் காரணமாகக் கொரோனா நோய்த்தொற்றும், அதற்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியும் கூறப்பட்டாலும், அரசியல் தவறுகள், காலநிலை மாற்றம் மற்றும் போர்களும் இதற்கு முக்கிய காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.
1990-ம் ஆண்டு முதல் தற்போது வரை, வறுமையில் வாழும் மக்களின் சதவீதத்தில் பெரிய மாற்றம் இல்லாத நிலையில், தற்போது உலகின் ஒரு சதவீத செல்வந்தர்கள் உலகின் மொத்த செல்வத்தில் 45 சதவீதத்திற்கு மேல் வைத்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தச் செல்வ சீரற்ற தன்மையைச் சமாளிக்க ஒவ்வொரு நாட்டின் அரசுகளும் கடும் அழுத்ததை எதிர்கொண்டு வருகின்றன.
சில அரசியல் தலைவர்கள், ஒரு பில்லியன் டாலரை மீறும் தனிநபர் சொத்துக்களை, அந்தந்த அரசாங்கங்கள் கைப்பற்ற வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளனர். இதே கருத்தை முன்வைத்த அமெரிக்க செனட்டரான பெர்னி சாண்டர்ஸ், ஒருவரால் 999 மில்லியன் டாலர் சொத்தை வைத்து வாழ முடியாதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு ஏற்றார்போல், நார்வே, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பொலிவியா, அர்ஜெண்டினா போன்ற சில நாடுகளும் தங்கள் நாட்டில் செல்வ வரிகளை விதித்து வருகின்றன.’ இதற்கிடையே கடந்த அக்டோபரில் தனது நிர்வாகிகள் மத்தியில் பேசியிருந்த எலான் மஸ்க், டெஸ்லா ஒரு ரோபோட் படையை உருவாக்கும் பட்சத்தில், அதன் கட்டுப்பாடு தனக்கு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் டெஸ்லாவின் மதிப்பில் 80 சதவீதம் ரோபாடிக்ஸில் இருந்து வரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சூழலில் டெஸ்லாவின் இந்த அறிவிப்பிற்கு பின் பங்குதாரர்கள் பலர் மஸ்கின் திட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வாக்களிக்கத் தயாராகி வருகின்றனர். மொத்தத்தில், டெஸ்லாவின் இந்தத் தீர்மானம் அந்நிறுவனத்தின் எதிர்காலத்தையும், உலகின் அதிகாரமும், செல்வமும் ஒருசிலரின் கைகளில் ஒருங்கிணைவதையும் தீர்மானிக்கும் முக்கிய முடிவாக உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
















