வங்கதேசம் தொடர்ந்து பகைமை பாராட்டி வரும் சூழலில், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி வழித்தடத்தில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் இருந்து ஹேக் ஹசீனா வெளியேறியதை தொடர்ந்து, முகமது யூனுஸ் அந்நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்தார். அவருக்கு இடைக்கால தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஹேக் ஹசீனா பிரதமாக இருந்தவரை இந்தியா – வங்கதேசம் இடையேயான உறவு சீராக இருந்து வந்தது. ஆனால், முகமது யூனூஸ் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தது முதல் இந்தியாவுடன் மோதல் போக்கைக் கடைபிடித்து வருகிறது.
இதுபோதாதென்று, ஒரே நேரத்தில் சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் அவர் நட்பு பாராட்டத் தொடங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் டாக்காவில் சீன-வங்கதேச முதலீட்டு மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய முகமது யூனூஸ், வங்கதேசத்தில் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளும்படி சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும், வங்கதேசத்தை தங்கள் வீடு போன்றும், தங்களின் உற்பத்தி மையமாகவும் மாற்றிக்கொள்ளுங்கள் எனவும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் அவர் சீனா சென்றிருந்தபோது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசினார்.
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள 7 மாநிலங்களும் நிலத்தால் சூழப்பட்டுள்ளதாகவும், அந்த மாநிலத்தவர்கள் தங்கள் நிலப்பரப்பை கடந்துதான் கடலுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். எனவே, அந்தப் பகுதியில் கடலின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம்தான் எனவும் கூறினார்.
மற்றொரு சமயம், பாகிஸ்தானின் கூட்டுப் படைகளின் தலைவரான சாஹிர் ஷாம்ஷாத் மிர்சா வங்கதேசத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவருக்கு முகமது யூனூஸ் வழங்கிய ‘ஆர்ட் ஆஃப் ட்ரையம்ப்’ என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. காரணம், அந்தப் புத்தகத்தின் அட்டை படத்தில், இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களையும் வங்கதேசத்தின் பகுதிகளாகக் குறிப்பிட்டு வரைபடம் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய காரணங்களால் வடகிழக்கு மாநிலங்களை முகமது யூனூஸ் குறிவைத்துள்ளாரோ எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, சிலிகுரி வழித்தடத்தில் இந்திய ராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. ஏனென்றால், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரி பகுதிதான், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கிறது.
இந்தப் பகுதி வழியாக மட்டும்தான், அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நம்மால் செல்ல முடியும். இந்தப் பகுதியை வங்கதேசம் ஆக்கிரமித்தால், அந்த 8 மாநிலங்களுக்குச் செல்லும் வழி துண்டிக்கப்படும். அத்துடன், இந்தச் சிலிகுரி பகுதியை ஒட்டிதான், நேபாளம், பூடான், சீனா ஆகிய நாடுகளும் அமைந்துள்ளன.
எனவே, 22 கிலோமீட்டர் கொண்ட இந்தச் சிலிகுரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதி பார்ப்பதற்கு கோழியின் கழுத்து போல் தோற்றமளிப்பதால், சிக்கன் நெக் எனவும் அழைக்கப்படுகிறது. ஒருவேளை வங்கதேசம் இந்தியாவுடன் நேரடியாக மோதலில் ஈடுபட எண்ணினால், அதன் முதல் இலக்கு இந்தச் சிலிகுரி பகுதியாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது.
முதற்கட்டமாக வங்கதேச எல்லையில் உள்ள பமுனி, கிஷன்கஞ்ச், சோப்ரா ஆகிய 3 இடங்களில் ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், S-400 வான் பாதுகாப்பு அமைப்பும், DRDO மற்றும் இஸ்ரேல் இணைந்து உருவாக்கிய MRSAM அமைப்பும் அப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்கு வங்காளத்தில் உள்ள ஹஷிமாரா விமானப்படை தளத்தில் ரஃபேல், மிக் ரக விமானங்களும், பிரம்மோஸ் ஏவுகணைகளும் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா விழிப்புடன் உள்ளதாகவும், வங்கதேசத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















