தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தருமபுரியில் வன வளங்கள் சார்ந்த கல்வியை மேம்படுத்தும் நோக்கில் புதிய வனயியல் கல்லூரி துவங்கப்படும் என்றும், பேரீச்சை உற்பத்தி மற்றும் பேரீச்சை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின் அவர்களே? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் அரசுக் கல்லூரிகளின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத திமுக அரசு, தருமபுரியில் புதிய வனயியல் கல்லூரி திறக்கப்படும் என்று பொய் கூறி அம்மக்களை நம்ப வைத்து ஏமாற்றியுள்ளது.
விவசாயிகளின் உற்ற தோழன் போல மேடைகளில் வசனம் பேசும் முதல்வரோ, திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி பேரீச்சை பயிரிட்ட தருமபுரி விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளார். இதுதான் நாடு போற்றும் நல்லாட்சியின் லட்சணமா? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
நெல், கரும்பு, மாம்பழம், பேரீச்சை, தேங்காய் உள்ளிட்ட எந்த விவசாயிகளும் திமுக ஆட்சியில் நிம்மதியாக இல்லை, மக்களும் பாதுகாப்பாக இல்லை, கல்வித்தரமும் மேம்படவில்லை, சுகாதாரமும் சிறக்கவில்லை, இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இனி மக்களுக்குத் தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் வாயில் வந்த வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றும் திமுகவின் மாயாஜாலம் இனி தமிழக மக்களிடையே எடுபடப் போவதுமில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
















