சென்னை ராயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.
வட சென்னை கடலோர பகுதிகளான ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே வானம் மேகம் மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்தநிலையில் பிற்பகலில் அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் கனமழை பெய்தது. இதன் காரணமாக பகலிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறே சென்றன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே மழைநீருடன் கழிவு நீர் கலந்து சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் நுரை போல் சென்றதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும், சிப்காட் பகுதியை ஒட்டி அமைந்துள்ள தாமரை ஏரியின் உள்வாய் பகுதி மூடப்பட்டுள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையின் இருபுறத்திலும் தேங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிம்ஸ்பார்க், டி.டி.கே சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கிச் சென்றனர்.
தேனி மாவட்டம் வருசநாடு சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடியது. இந்நிலையில், அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தருமபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தீர்த்தமலை, நல்லம்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
















