தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முப்படைகளை நவீனமயமாக்கும் வகையில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. வான்பாதுகாப்பு அமைப்பில் கேம்சேஞ்சர் என்று பாராட்டப்படும் ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளையும் புதிய ஏவுகணைகளையும் இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
S-400 என்பது ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நிலத்தில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு ஆகும். 2018ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து சுமார் 40,000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பைக் கொள்முதல் செய்வதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது.
அப்போதே Countering America’s Adversaries Through Sanctions Act சட்டத்தின் படி இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதிக்கக்கூடும் என்ற கூறப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை. மாறாக 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி, ரஷ்யாவிடம் இருந்து பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்கு இந்தியாவுக்கு சிறப்பு அனுமதி வழங்க வகை செய்யும் விதமாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒரு சட்டதிருத்தத்தை நிறைவேற்றியது.
ஏற்கெனவே, நான்கு S-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்திய விமானப்படையில் இணைக்கப் பட்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக விநியோக தாமதம் ஏற்பட்ட நிலையில் மீதமுள்ள S-400 வான் பாதுகாப்பு அமைப்பு இன்னும் 12 மாதங்களுக்குள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த மே மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூரில் எஸ்-400 நவீன வான்வழி போரில் ஒரு கேம் சேஞ்சராகச் செயல்பட்டு உலகையே வியக்க வைத்தது. பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானத்தை 300 கிலோமீட்டர் தொலைவில் வரும் போதே நடுவானிலேயே எஸ்-400 சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், 10,000 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஐந்து S-400 யை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது 120 கிமீ, 200 கிமீ, 250 கிமீ மற்றும் 380 கிமீ இடைமறிப்பு வரம்புகளைக் கொண்ட S-400 அமைப்புகளை வாங்க இந்தியா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே S-400 க்கான விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தையும் அங்கீகரித்துள்ள ரஷ்யா, இந்தியாவில் S-400க்கான பராமரிப்பு, பழுது மற்றும் பழுதுபார்ப்பு ஆகிய வசதிகளை அமைத்துக் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதவிர, ரஷ்யாவிடமிருந்து எஸ்-500-களையும், 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடற்படையை நவீனப்படுத்தும் வகையில் சுகோய்-30MKI களையும் ஐந்தாம் தலைமுறை சுகோய்-57களையும் கொள்முதல் செய்ய இந்தியா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், அமெரிக்காவிடம் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்கனவே 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ள இந்தியா, அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகக் கடந்த அக்டோபர் 31ம் தேதி, புதிய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது. தேஜஸ் போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் என்ஜின்களுக்காக ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் சுமார் 8,900 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்திய கடற்படைகாகச் சுமார் 15,157 கோடிரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் 24 அமெரிக்க MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கு ‘தொடர் ஆதரவு தொகுப்பு’க்கு கூடுதலாக 7,000 கோடி ரூபாயை மத்திய ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
2035ம் ஆண்டுக்குள் உள்நாட்டு ஸ்டெல்த் மேம்பட்ட நடுத்தர போர் விமானத்தை உருவாக்கச் செயல்பட்டு வரும் இந்தியா அதற்கு முன்னதாகவே தனது முப்படைகளை வேகமாக மேம்படுத்தி வருகிறது.
















