“டிட்வா” புயலின் தாக்கம் இலங்கையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்…
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுக் கடந்த 27-ம் தேதி காலைப் புயலாக வலுவடைந்தது. டிட்வா எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த அந்தப் புயல் இலங்கையை ஒட்டி உருவானதால் அங்கு விடாமல் மழை கொட்டி தீர்க்கும் நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருவதால், பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி மக்கள் பரிதவித்து வருகின்றனர். பல பகுதிகளில் சாலைகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளதோடு, ரயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. இதனால் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது தவிர மண் சரிவு காரணமாக ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும் அவர்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. ஆறுகள், நீர்நிலைகள் நிரம்பி வழியும் அளவிற்கு நிலைமை மோசமடைந்துள்ளதால், நுவரலியா பகுதியில் உள்ள ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்புவில் உள்ள ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கெலானி ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் ரெட் லெவல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுவரை இந்த இயற்கை பேரிடரால் 55-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே இரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 21 பேர் வரை உயிரிழந்துளனர். 600-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரிடராக டிட்வா புயல் பதிவாகியுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள மடாலேவின் கம்மதுவா பகுதியில், 24 மணி நேரத்தில் 540.60 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர செட்டிகுளத்தில் 315 மில்லி மீட்டரும், அலபிலியில் 305 மில்லி மீட்டரும், கண்டியில் 223.9 மில்லி மீட்டரும், அனுராதபுரத்தில் 203.6 மில்லி மீட்டரும், திரிகோணமலையில் 201 மில்லி மீட்டர் அளவிற்கும் மழை கொட்டி தீர்த்திருக்கிறது.
கனமழை காரணமாகப் படுல்லா மாவட்டம் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்திருப்பதும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகள்மூலம் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பேரிடர் மேலாண்மை குழுக்களுடன் இணைந்து ராணுவத்தினரும் மீட்பு பணிகளில் தீவிரம் காட்டி வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இலங்கை கடற்படையின் 75-வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக அந்நாட்டு துறைமுகத்திற்கு சென்ற, ஐஎன்எஸ் விக்ராந்தும், அண்மையில் சேவையில் இணைந்த ஐஎன்எஸ் உதயகிரியும், ஹெலிகாப்டர்களை அனுப்பி முதற்கட்ட மீட்பு பணிகளை தொடங்கியுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொண்டு வரும் இலங்கை, தற்போது உருவாகியுள்ள டிட்வா புயலால் இந்த அளவிற்கு பாதிப்பை சந்திக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
















