கொடைக்கானலில் மழை காரணமாக பூம்பாறைக்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதனிடையே, தொடர் மழை காரணமாக வனப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேல் மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கிளாவரை ஆகிய மலை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில், கொடைக்கானல் மலை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் மேல் மலை கிராமத்திற்கு செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சென்ற நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வனத்துறையினர் மரத்தை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
















