கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
“டிட்வா” புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் சென்னையில் கனமழை பெய்து வருகிறது.
இதன்காரணமாகப் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி சாலையில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதேபோல் கோடம்பாக்கத்தில் ரங்கராஜபுரம், ஆஜீஷ் உள்ளிட்ட தெருக்களில் மழைநீர் முழங்கால் அளவுக்குத் தேங்கி உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையைக் கடக்க முடியாமல் சிரமத்தைச் சந்தித்தனர். சாலைகளில் தேங்கிய மழைநீரை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென மாநகராட்சிக்குப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையை அடுத்த திருவேற்காட்டில் ஏழுமலை நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை எனவும் மழைநீரில் பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் உள்ளதால் அச்சமாக உள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சென்னை திருவொற்றியூர் ராஜாஜி தெருவில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
இதனால் வீடுகளுக்குள் தேங்கிய மழைநீரை, பாத்திரம்மூலம் குடியிருப்பு வாசிகள் வெளியேற்றுகின்றனர். மேலும் அப்பகுதியில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
மழைக்காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது எனவும் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையெனவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
















