தமிழகத்தில் மொழியை வைத்து மக்களிடையே வேற்றுமையை உருவாக்குவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ‘காசி தமிழ் சங்கமம்’ 4.O நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழகத்தில் மொழியை வைத்து வேற்றுமையை உருவாக்குவதாக குற்றம் சாட்டினார்.
குறுகிய அரசியல் எண்ணத்துடன், அரசியல் லாபத்துக்காக இந்த வேலையை சிலர் செய்வதாகவும் அவர் விமர்சித்தார். ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கும்படி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருவதாக கூறிய அவர், நிகழ்ச்சியில் பங்கேற்றால் தமிழகத்திற்கும், காசிக்கும் உள்ள நீண்ட கால தொடர்பை அறிய முடியும் என்றும் தெரிவித்தார்.
மொழி பாகுபாடு தங்களிடம் இல்லை என குறிப்பிட்ட அவர், சுயநல சக்திகள் தான் மொழியை வைத்து உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் விமர்சித்தார். இந்த செயல் அரசியலில் வேண்டுமானால் கை கொடுக்கலாம், ஆனால் மக்களிடம் நன்மதிப்பை பெற்று தராது என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
















