சென்னையை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்த மழைநீரால் குடியிருப்புவாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் உள்ள மணிவாசகம் தெரு, காமராஜர் தெரு, பாரதியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பிரதான சாலை மட்டுமின்றி குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் நுழைந்துள்ளதால் வீட்டு உபயோக பொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
குடியிருப்பு பகுதிகளை மழைநீர் குளம் போல் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. தேங்கியுள்ள தண்ணீரில் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைவதாக குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே சென்னையை அடுத்த சேலையூரில் சாலையோரத்தில் உள்ள மரம், வேரோடு சாய்ந்து விழுந்தது. மின் கம்பி மீது மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், ஜேசிபி வாகன உதவியுடன் மரத்தை அகற்றினர்.
















