ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் போரில் நடுநிலை வகிக்காமல் அமைதியின் பக்கமே இந்தியா நிற்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
23வது இந்திய ரஷ்யா உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதினுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது.
அதன் பிறகு,டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் அதிபர் புதினும் அதிகாரப்பூர்வ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், உக்ரைனில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அமைதியான தீர்வுக்கான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் விவகாரத்தில் தீர்வு காண்பதில் அதிக கவனம் செலுத்தும் பிரதமர் மோடிக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அதிபர் புதின், வரலாற்றில் ஆழமாக வேரூன்றியுள்ள இந்திய- ரஷ்ய உறவு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டுகளில், இந்திய- ரஷ்ய உறவை வளர்ப்பதற்குப் பிரதமர் மோடி, பெரும் பணிகளைச் செய்துள்ளதாக கூறிய அதிபர் புதின், உயர் தொழில்நுட்பம் சார்ந்த விண்வெளி ஆய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட கூடுதல் துறைகளில் இந்தியாவுடனே ஒத்துழைப்பை ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
உலகின் நலன் அமைதிப் பாதையின் மூலமே உருவாகும் என்றும், ஒன்றாக அமைதிக்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும், தொடர்ந்து எடுத்துவரும் முயற்சிகளால், மீண்டும் ஒருமுறை உலகம் அமைதிக்குத் திரும்பும் என்று நம்புவதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், கோவிட் முதல் இன்றுவரை, உலகம் பல நெருக்கடிகளைக் கடந்து வந்துள்ளதாகவும், மிக விரைவில் உலகம் ஒரு புதிய நம்பிக்கையைப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
உலகத் தலைவர்களுடன் உக்ரைன் போர் குறித்து விரிவாக விவாதித்த போதெல்லாம், இந்தியா நடுநிலையாக இல்லை என்றும் உண்மையின் பக்கமே நிற்கிறது என்றும் எப்போதும் கூறி வருவதாக தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியாவின் தெளிவான இந்த நிலைப்பாடு அமைதிக்கானது என்றும் அமைதிக்கான ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா ஆதரிக்கும் என்றும் கூறியுள்ளார்.
















