இந்தியாவையும் ரஷ்யாவையும் நெருக்கமாகக் கொண்டு வந்ததற்காக, அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு வழங்கலாம் என்று அமெரிக்க முன்னாள் பென்டகன் அதிகாரி மைக்கேல் ரூபின் தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப்பின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேசிய நலனுக்கே முன்னுரிமை என்பதில் இந்தியா உறுதியாக இருக்கும் நிலையில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் மறைமுகமாக உக்ரைன் போருக்கு உதவுவதாகக் காரணம் காட்டி இந்தியா மீது ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்துள்ளார். இந்தச் சுழலில், 23வது இந்திய ரஷ்ய உச்சி மாநாட்டுக்காக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா சர்வதேச அளவில் தவிர்க்க முடியாத முதன்மை சக்தியாக உள்ளது என்று பாராட்டியுள்ளார்.
மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமான இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி மற்றும் இந்தியாவின் எரிசக்தி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நிலையாக, தடை இல்லாமல் ரஷ்யா வழங்கும் என்றும் உறுதியளித்துள்ளார். தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தொழில்நுட்பம், தகவல்தொடர்பு மற்றும் பாதுகாப்பு எனப் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அவசியமான மற்றும் திறமையான போக்குவரத்து வழித்தடங்களை உருவாக்குவதில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்புக்கொண்டுள்ள பிரதமர் மோடியும் அதிபர் புதினும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருநாட்டு வர்த்தகத்தைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்வதற்கான செயல்திட்டத்தையும் வகுத்துள்ளனர்.
இந்நிலையில், பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், அதிபர் ட்ரம்பின் திறமையின்மையால் தான் ரஷ்ய அதிபர், இந்தியாவுடன் அதிக நெருக்கத்தைக் காட்டுவதாக 65 சதவீத அமெரிக்கர்கள் கருதுவதாகக் கூறியுள்ளார். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறப் போகும் இந்தியா, அதற்கேற்ப எரிசக்தி தேவைகளையும் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள மைக்கேல் ரூபின், ரஷ்யாவிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட கனிமங்கள் இறக்குமதி செய்யும் அமெரிக்கா, இந்தியாவை ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யக் கூடாது என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க-இந்திய உறவுகளை அதிபர் ட்ரம்ப் தலைகீழாக மாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தார் ஆகியவற்றின் தாக்கத்தால், தவறான வெளியுறவுக் கொள்கைகளையே ட்ரம்ப் எடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்கிடையே அடுத்த ஆண்டுக்கான புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை, அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது.
அதில் இந்தியாவை ‘முக்கிய கூட்டணி நாடாக அறிவித்துள்ள அமெரிக்கா, வர்த்தகம், பாதுகாப்பு, தொழில் நுட்பம் உள்ளிட்ட பல துறைகளில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என்று அறிவித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி, பாதுகாப்பு நிலைத்தன்மை, தொழில் நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் முக்கிய சக்தியாக விளங்கும் இந்தியாவுடன் நீண்டகால நட்புறவை மேம்படுத்துவது அமெரிக்காவின் பாதுகாப்பு குறிக்கோளில் முக்கிய அம்சமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடர்பாக ரிக் ஸ்விட்சர் தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இந்தியாவுக்கு வர முடிவு செய்துள்ளதாகவும், இந்த மாத இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அதிபர் புதினின் இரண்டு நாள் இந்தியப் பயணம் உலக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. புவி சார் அரசியலில் மையப் புள்ளியாக இருக்கும் இந்தியா உலக ஒழுங்கையே இதன் மூலம் மாற்றியுள்ளது.
















