பாகிஸ்தான் உட்பட பல நாடுகள், சர்வதேச கண்காணிப்புக்குத் தெரியாமல் ரகசியமாக நிலத்தடியில் குறைந்த சக்தி கொண்ட அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தச் சுழலில் மீண்டும் அணுஆயுத சோதனைகளை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதைத் தொடர்ந்து ரஷ்யா 1949ம் ஆண்டு அணுசக்தி சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததை அடுத்து உலக அளவில் குறைந்தபட்ச அமைதியை நிலைநாட்ட அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அணுசக்தி உள்ள நாடுகள் அந்தத் தொழில் நுட்பத்தை வேறு நாடுகளுக்கு வழங்கமாட்டோம் என்று ஒப்புக்கொண்டனர். அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கவோ பெறவோ மாட்டோம் என்று பிற நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தம் 1968ம் ஆண்டு கையெழுத்தானது. 5 நாடுகளைத் தவிர பிற நாடுகளுக்கு இந்த NPT ஒப்பந்தம் பாரபட்சமானது என்று இந்தியா கையெழுத்திடாமல் மறுப்புத் தெரிவித்தது.
1962-ல் இந்தியாவுடனான போரை தொடர்ந்து சீனா 1964-ல் அணுஆயுத சோதனைகளை நடத்தியது. 1965 மற்றும் 1975ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்ட நிலையில், புதிய பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருந்தது இந்தியா. தற்காப்புக்காக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் 1974ம் ஆண்டு மே 18ம் தேதி புத்தரின் அவதார தினத்தில் பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுஆயுத சோதனையை வெற்றிகரமாக நடத்தியது 1998-ல் அன்றைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் மீண்டும் பொக்ரான்-II என்று அணுசக்தி சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது. அதன் பின்னர், இந்தியா அணுசக்தி சோதனைகளில் ஈடுபடாமல், subcritical tests எனப்படும் கணினி-உருவகப்படுத்தப்பட்ட அணுசோதனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது.
அதன் பிறகு தான் இந்தியா, அக்னி போன்ற மேம்பட்ட அணு ஆயுதங்கள் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உள்நாட்டிலேயே தயாரிக்கத் தொடங்கியது. 2005-ல் அமெரிக்காவும் இந்தியாவும் சிவில் அணுசக்தி ஒத்துழைப்பில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் காரணமாக, அணுசக்தியில் உலக அளவில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது. இதன்படி அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை உருவாக்கவும், நாட்டின் எரிசக்தி திட்டத்துக்கு அணு எரிபொருளை வழங்கவும் அனுமதிக்கப்பட்டன. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத போதிலும் அணுசக்தி விநியோகஸ்தர்கள் குழு இந்தியாவுக்கு விலக்கு அளித்தது.
இதனால் மற்ற நாடுகள் இந்தியாவுக்கு அணு எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்தை விற்க முடிந்தது. இது பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் கனடாவுடனான ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஜெய்தாபூர் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் போன்ற அமைதியான அணுசக்தி திட்டங்களை இந்தியாவில் செயல்படுத்த உதவியது. இந்நிலையில் தான் சீனா, ரஷ்யா, வட கொரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரகசியமாக அணு சக்தி சோதனைகள் செய்ததாக கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 33 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா அணு சக்தி சோதனைகளை தொடங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டும் என அமெரிக்க போர் துறைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட் மேன் 3 ஏவுகணையை அமெரிக்கா சோதனை செய்தது. பிற நாடுகள் அணுஆயுதசோதனைகளை நடத்தினால் அணுஆயுத சோதனைகளை செய்ய ரஷ்யாவும் தயங்காது என்று அந்நாட்டு அதிபர் புதின் எச்சரித்துள்ளார். இந்த ஆண்டு, உலக அணுசக்தி தரவுகளின் படி, அணு சக்தி நாடுகள் என்று அறியப்படும் ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் மற்றும் வட கொரியா ஆகிய ஒன்பது நாடுகளும் மொத்தமாக சுமார் 12,331 அணுஆயுதங்களை வைத்துள்ளன.
அவற்றில் 9,600-க்கும் மேற்பட்டவை செயல்பாட்டில் உள்ளன. இதில் சுமார் 90 சதவீதம் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிடம் உள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சீனா அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானும் தன் பங்குக்கு அணுசக்தி சோதனைகளை இரகசியமாக செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு புவிசார் அரசியல் மாற்றங்களின் விளைவாக, இந்தியாவும் அணுசக்தி சோதனைகளை நடத்த வேண்டிய நேரம் இது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 2047ம் ஆண்டுக்குள் 100 ஜிகாவாட் அணுசக்தியை உருவாக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத் தக்கது.
















