பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார்.
ஐநாவில் “உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்” என்ற பெயரில் சிறப்பு விவாதம் நடைபெற்றது. இதில் ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி பர்வதனேனி பங்கேற்று பேசினார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் ஆதரித்ததாகவும் இதன்மூலம் தீவிரவாதத்திற்கு ஆதரவாக அந்நாடு செயல்படுவது உலகின் முன் அடிகோடிட்டு காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எல்லையில் தீவிரவாத தாக்குதலை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்த நிறுத்தம் தொடரும் என கூறிய அவர், கடந்த 4 தசாப்தங்களாக பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதலால் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்திய மக்கள் கொல்லப்பட்டதாக கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என இந்திய பிரதிநிதி பர்வதனேனி தெரிவித்தார். இதனிடையே பாகிஸ்தான் ராணுவ அதிபர் அசிம் முனிருக்கு சிறப்பு அதிகாரம் அளித்து அந்நாட்டு அரசு ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ளது என இந்திய பிரநிதிநிதி பர்வதனேனி குற்றம்சாட்டினார்.
















