டெல்லி – ஆக்ரா சாலையில் கடும் பனி மூட்டம் காரணமாக, பேருந்துகள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி தீப்பிடித்ததில், 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இந்தநிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகேக டெல்லி – ஆக்ரா விரைவுச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியது.
இதன்காரணமாக அவ்வழியாக சென்ற 7 பேருந்துகள், 3 கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டன. பயணிகள் நிலைமையை உணர்வதற்குள், அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் தீப்பிடித்து எரிய தொடங்கின.
பயணிகள் அனைவரும் அலறியடித்து வெளியேறிய நிலையில், 5 பேருந்துகள், 2 கார்கள் முழுவதும் எரிந்து நாசமாயின. தகவலறிந்த 11 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. விரைவாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுப்படுத்திய நிலையில், 4 பேரை சடலமாக மீட்டனர்.
படுகாயமடைந்த 25க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பேட்டியளித்த பயணி ஒருவர், அதிகாலை 4 மணியளவில் விபத்து நேரிட்டதாக கூறினார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார், காயமடைந்த அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் வாகனங்களில் பற்றிய தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர்.
இதனிடையே விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதியத்நாத் தெரிவித்துள்ளார். கடும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை பயணத்தை தவிர்க்குமாறு வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
















