2075-ம் ஆண்டுக்குள் இந்தியா, அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி, சீனாவுக்கு அடுத்ததாக உலகின் 2வது பெரிய பொருளாதாரமாக மாறும் எனக் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் கணித்துள்ளது.
எதிர்வரும் ஐம்பது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தின் அதிகார மையம் பெரிய அளவில் மாறப்போகிறது என உலகப் புகழ்பெற்ற முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பொருளாதாரம் சீராக வளர்ந்து வருவதால் உலக அளவில் 2-ம் இடத்தைப் பெறும் என உறுதியாகத் தெரிவித்துள்ளது.
2075-ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வரிசை விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் சீனா சுமார் 57 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடன் உலகின் முதலிடத்தில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சுமார் 52.5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்றும், தற்போது உலகின் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்கா 51.5 டிரில்லியன் டாலர் மதிப்புடன் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இளம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில்நுட்ப வளர்ச்சி, அதிகரிக்கும் முதலீடுகள், தொழிலாளர் உற்பத்தித்திறன் ஆகியவை முக்கிய காரணங்களாக அமையும் எனக் கோல்ட் மேன் சாக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
















