தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர் கூட ஆர்டர்லிகளாக இல்லை என டிஜிபி கூறுவது நம்பும்படியாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கோயில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் ஆர்டர்லிகளே இல்லை என தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சீருடை காவலர்கள் ஆர்டர்லிகளாக பணியாற்றி வருவதாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆர்டர்லிகள் முறை தற்போது இல்லை என டிஜிபி தெரிவித்திருப்பது நம்பும்படியாக இல்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
இதற்கு பதிலளித்த தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
இதனையடுத்து, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் தாமாக முன்வந்து பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
















