உளுந்தூர்பேட்டை அருகே திமுகவினர் கோஷ்டி மோதல் காரணமாகச் சாலை பணி தடைபட்டதால், திமுக எம்.எல்.ஏ வீட்டை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்குச் செல்லப் போதிய சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் சாலை வசதி வேண்டிக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து, சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், டெண்டர் எடுப்பதில் திமுக மாவட்ட கவுன்சிலர் சுந்தரமூர்த்திக்கும், திமுக கிளை செயலாளர் வேல்முருகனுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வந்துள்ளது.
வேல்முருகன் தரப்பினர் நீதிமன்றம் சென்று சாலை அமைக்கும் பணிக்குத் தடை ஆணை பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் விவசாய நிலத்தில் அறுவடை செய்யும் பயிர்களை எடுத்து வரப் போதிய சாலை வசதி இல்லாததால் கிராம மக்களே சாலை அமைக்க முடிவெடுத்து பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தகவலறிந்த திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், வயல்வெளியில் சாலை அமைக்கக் கூடாது எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், கோபமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உளுந்தூர்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
















