சபரிமலையில் பருப்பு, பப்படம் மற்றும் பாயாசத்துடன் கூடிய கேரள பாரம்பரிய விருந்தாக மதிய உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கியது.
சபரிமலை வரும் பக்தர்களுக்குத் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் உணவு வழங்கப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவசம்போர்ட்டின் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெயக்குமார், மதிய அன்னதானத்தில் பக்தர்களுக்குக் கேரள பாரம்பரிய விருந்து வழங்கப்படுமென அறிவித்திருந்தார்.
அதன்டி இந்தத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பருப்பு, சாம்பார், ரசம், அவியல், துவரன், ஊறுகாய், பப்படம் மற்றும் பாயாசம் ஆகியவற்றுடன் பக்தர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்தச் சீசனில் ஒருநாள் விட்டு ஒருநாள் இந்த விருந்து வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















