மகளிர் உதவித்தொகை மூலம் கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாய் டாஸ்மாக்கிற்கு தான் செல்வதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் செம்புளிச்சாம்பாளையம் பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அந்தியூர் வெற்றிலை பாக்கிற்கு புவிசார் குறியீடு பெற்ற தர வேண்டும் எனவும், பவானி ஜமுக்காளம் நெசவாளர்களின் குறைகளை களைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற பொதுமக்கள் எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து பேசிய நயினார் நாகேந்திரன், 5 ஆண்டுகளாக சரியான நபர்களிடம் ஆட்சியை தராததால் சாலை வசதி இல்லை என்று குற்றஞ்சாட்டினார்.
மாதம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் டாஸ்மாக் கடைக்கு தான் செல்வதாகவும் , யாருக்கு வாக்களிக்க வேண்டும், யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் கூறினார்.
















