2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெறும் 72-வது தேசிய வாலிபால் போட்டியை பிரதமர் மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் எண்ணற்ற விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில், விளையாட்டு வீரர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். மேலும், வாலிபால் போட்டிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் ஒற்றுமை உள்ளது என குறிப்பிட்ட அவர், இரண்டுமே ஒரு அணியாக ஒன்றுபடும்போதுதான் வெற்றி சாத்தியமாகிறது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, 2030ல் காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான ஏல நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அறிவித்தார்.
















