நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் தயாரிப்பாளருமான சரவணன், கடந்த டிசம்பர் 4ம் தேதி வயதுமூப்பு காரணமாக காலமானார்.
இந்நிலையில், ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மநீம கட்சியின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஏவிஎம் சரவணனின் உருவப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏவிஎம் சரவணனின் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, ஏவிஎம் நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பற்றி பேசவே முடியாது எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், ஏவிஎம் நிறுவனத்திற்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதையும் வெளிப்படுத்தினார்.
பின்னர் பேசிய ரஜினிகாந்த், நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுவதாக வேதனை தெரிவித்தார். சினிமா மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் உதவியவர் என்றும், ஏவிஎம் சரவணன் ஒரு ஜென்டில்மேன் என்றும் அவர் கூறினார்.
“ஏவிஎம் சரவணனின் அலுவலகத்திற்கு சென்றால் ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.
















