வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா திடீரென சிறைபிடித்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், யார் இந்த மதுரோ?, “சாதாரண” பேருந்து ஓட்டுநராக இருந்த அவர் எப்படி அதிபர் பதவியை அடைந்தார்? அமெரிக்கா அவரை குறிவைக்க காரணம் என்ன?
வெனிசுலாவின் தலைநகரான கராகஸில் 1962ம் ஆண்டு நிகோலஸ் மதுரோ பிறந்தார். அவரது தந்தை, அப்பகுதியில் செயல்பட்டு வந்த தொழிற்சங்கம் ஒன்றின் தலைவராக இருந்தார். படிப்பை முடித்ததும் பேருந்து ஓட்டுநராக பணியாற்றத் தொடங்கிய மதுரோ, தொழிற்சங்கத்திலும் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.
அடுத்த சில வருடங்களில் தொழிற்சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் உருவெடுத்தார்.
அந்த சமயத்தில், அதாவது 1990களின் தொடக்க காலத்தில் வெனிசுலாவை கார்லோஸ் ஆண்ட்ரெஸ் பெரெஸ் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சியில் ஊழல் அதிகரிக்கவே, ராணுவ அதிகாரியான ஹியூகோ சாவேஸ் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். ஆனால்,
இதனை தொடக்க கட்டத்திலேயே கண்டுபிடித்துவிட்ட அதிபர் கார்லோஸ், அதனை முறியடித்தார். அத்துடன் ஹியூகோ சாவேஸையும் சிறையில் தள்ளினார்.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் சாவேஸ் தோல்வியடைந்திருந்தாலும், மக்களிடம் அவர் அதிக செல்வாக்கை பெற்றார்.
சாவேஸால் கவரப்பட்ட நிகோலஸ் மதுரோ, அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட தொடங்கினார். அத்துடன் சாவேஸை விடுவிக்க வலியுறுத்தி பிரச்சாரங்களையும் முன்னெடுத்தார். 1994ம் ஆண்டு சாவேஸ் சிறையில் இருந்து விடுதலையானதும், ராணுவ நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, தேர்தல் அரசியலில் ஈடுபட தொடங்கினார். நிகோலஸ் மதுரோவும் அவருடன் இணைந்துகொண்டார்.
1998ம் ஆண்டு வெனிசுலா தேர்தலில் சாவேஸ் அதிபரான நிலையில், நிகோலஸ் மதுரோ நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். அவரது செயல்பாடுகள் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து உயர் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
2005ம் ஆண்டு நாடாளுமன்ற தலைவராகவும், 2006ம் ஆண்டு
வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்ட அவர், பின்னர் துணை அதிபராக உயர்ந்தார்.
கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அதிபர் சாவேஸூக்கு அடுத்த இடத்தில் நிகோலஸ் மதுரோ இருந்தார்.
அந்த சமயத்தில்தான் சாவேஸூக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
அவருக்கு ஏதாவது ஆகும்பட்சத்தில் அதிபர் பதவியை கைப்பற்ற, அமைச்சர்கள் பலர் காய்களை நகர்த்த தொடங்கினார்கள்.
ஆனால், தனக்கு பிறகு மதுரோதான் அதிபராக வேண்டும் என்பதில் சாவேஸ் திடமாக இருந்தார். அதனை அறிவிப்பாகவும் வெளியிட்டார்.
அதன்படியே, 2013ம் ஆண்டு அவர் உயிரிழந்ததும்,
வெனிசுலாவின் புதிய அதிபராக நிகோலஸ் மதுரோ பதவியேற்றார். ஆனால், அவரது ஆட்சி அத்தனை சுபீக்ஷமானதாக இருக்கவில்லை. உணவு பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்டவை காரணமாக அவரது அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டபடியே இருந்து.அவரது தேர்தல் வெற்றிகளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.
2018ம் ஆண்டு அவர் பெற்ற வெற்றியை சுமார் 10 நாடுகள் அங்கீகரிக்க மறுத்துவிட்டன.
மறுபுறம் அவரை கொலை செய்யவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
குறிப்பாக, 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி கராகஸில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் மதுரோ உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 2 ட்ரோன்கள் மதுரோவை குறிவைத்து ஏவப்பட்டன. ஆனால், அந்த அந்த தாக்குதலில் இருந்து நிகோலஸ் மதுரோ தப்பிவிட்டார். இருப்பினும், ராணுவ வீரர்கள் 7 பேர் உயிரிழக்க நேரிட்டது.
அமெரிக்க எதிர்ப்பு என்பதை தொடக்கம் முதலே தனது பிரதான கொள்கையாக மதுரோ கொண்டிருந்தார். இவரின் இந்த நிலைப்பாடு ரஷ்யா மற்றும் சீன அரசுகளுடன் அவருக்கு நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு தேவையான உதவிகளை அந்த இரு நாடுகளும் செய்துகொடுத்தபடி இருந்தன.
இந்த சூழலில், அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், நிகோலஸ் மதுரோவை குறிவைத்தார். போதைப்பொருள் சாம்ராஜ்ஜியத்திற்கும், பயங்கரவாத குழுக்களுக்கும் அவர் தலைமை தாங்குவதாக குற்றச்சாட்டினார். மதுரோவின் தலைக்கு 450 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்ததுடன், வெனிசுலா மீது பொருளாதார தடைகளையும் விதித்தார். ஒரு கட்டத்தில் மதுரோவை கைது செய்ய முடிவெடுத்த டிரம்ப், வெனிசுலாவில் இருந்து மதுரோ தப்பிச்செல்ல வாய்ப்பும் வழங்கினார்.
அதனை ஏற்க மறுத்த மதுரோ, நான் பிறந்த நாடு இதுதான். ஆகவே நான் இங்குதான் இருப்பேன் என தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, கடந்தாண்டு இறுதியிலேயே அவர் சிறைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக திட்டம் தள்ளிப்போனது. வானிலை சாதகமாக அமைந்ததும், ஜனவரி 3ம் தேதி மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.
ஒரு நாட்டின் தலைவரை வேறொரு நாடு கைது செய்தால் அந்நாட்டில் எப்படிப்பட்ட சூழல் நிலவ வேண்டும். போராட்டங்கள் வெடிக்க வேண்டும். கண்டனங்கள் வலுக்க வேண்டும். தொடர் போராட்டங்களால் அந்த நாடே அல்லுசில்லாக வேண்டும். ஆனால், வெனிசுலா மக்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. மாறாக, கொண்டாட்டங்களில் ஈடுபட்டு திளைத்து வருகின்றனர். இந்த கொண்டாட்டங்களே போதும், நிகோலஸ் மதுரா யார் என்பதையும், அவரது ஆட்சி எத்தகையது என்பதையும் அறிய.
















