திருப்பூர் அருகே கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்தார்.
அவிநாசியை அடுத்த ராக்கியாபட்டியில் அமைந்துள்ள செல்வமுத்து குமாரசாமி கோயில், அரசு இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகக் கூறி அதனை வருவாய்த்துறை அதிகாரிகள் இடிக்க முயன்றனர்.
அதற்கு இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையிலான நிர்வாகிகளும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயிலில் குவிந்து அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை முன்கூட்டியே எதிர்பார்த்த அதிகாரிகள், காவல்துறையினரை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதன் காரணமாக அங்கு வாக்குவாதம் ஏற்பட்டு, பிறகு தள்ளுமுள்ளாக மாறியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.
பின்னர், போராட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்திய பிறகு, அதிகாரிகள் எவ்வித இடையூறும் இன்றி ராட்சத பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கோயிலை இடித்து அகற்றினர். இதனால், சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்கள், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இதனிடையே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளில் காயமடைந்தார். அவருக்கு திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, இடிக்கப்பட்ட செல்வமுத்து குமாரசாமி கோயிலை பார்வையிடச் சென்ற இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமாரையும் போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்தனர்.
















