வெனிசுலாவுக்குள் புகுந்து அந்நாட்டின் அதிபரையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அடுத்தடுத்து, மேலும் சில லத்தீன் அமெரிக்க நாடுகளையும் ராணுவ நடவடிக்கை மூலம் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1989ல் ஆபரேஷன் ஜஸ்ட் காஸ் என்கிற பெயரில் பனாமா மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டின் அப்போதைய அதிபர் மானுவல் நோரியேகாவைக் கைது செய்தது.
இப்படி இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அதிரடியாக அதிபரைக் கைது செய்து அந்நாட்டில் தனது பொம்மை அரசை நிறுவுவதை, 1823-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோவால் முன்வைக்கப்பட்ட கொள்கையாகும். எனவே இந்த கொள்கை மன்றோ கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்கா என்பது தெற்கு மற்றும் வடக்கு அமெரிக்காவையும் உள்ளடக்கிய பெரிய நிலப்பரப்பு என்பது தான் மன்றோ கொள்கை.
‘அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற சொன்னார் மன்றோவின் கொள்கையின் புதிய வடிவத்தை தான் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கையாக அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த கொள்கையின்படியே, சர்வதேச சட்டங்களை மதிக்காமல், தெற்கு,வடக்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் தான் நடத்தும் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.
தனது விருப்பத்துக்கு ஏற்ப லத்தீன் அமெரிக்க நாடுகளில், அரசியல் முடிவுகளை ராணுவ நடவடிக்கையால் அமெரிக்கா எடுக்கும் என்பதற்கு வெனிசுலா மீதான நடவடிக்கையே ஒரு எடுத்துக்காட்டாகும்.
கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதியான குஸ்டாவோ பெட்ரோவைப் பற்றி கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், ஒரு மோசமான நபரால் அந்த நாடு ஆளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் மற்றும் அவரது மனைவியைக் கைதுசெய்து அமெரிக்காவுக்குக் கடத்திவந்த ட்ரம்ப், தனது அடுத்த இலக்கு மெக்சிகோ, கியூபா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் தான் என எச்சரித்துள்ளார்.
கொக்கெய்ன் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருவதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
வெனிசுலாவில் அமெரிக்காவின் நடவடிக்கையை லத்தீன் அமெரிக்காவின் இறையாண்மை மீதான ஒரு தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள பெட்ரோ, இது மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கியூபா பெரிய சிக்கலில் இருக்கிறது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு கியூபாவே பாதுகாப்பு அளித்தது என்று குற்றம்சாட்டிய மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் தாக்குதலில் இருந்து கியூபா தப்பிக்க முடியாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
முன்னதாக, கியூபாவை ஒரு தோல்வியுற்ற நாடு என்று கூறிய ட்ரம்ப், அந்நாட்டு மக்களுக்கு உதவ இருப்பதாகவும் கூறியிருந்தார்.
கியூப அதிபர் மிகுவல் டயஸ்-கனெல், வெனிசுவேலா மீதான தாக்குதலைக் கண்டிப்பதாகவும், சர்வதேச அமைப்புகள் அமெரிக்கா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், “தாய்நாடு அல்லது மரணம்!” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட சிறிது நொடியிலேயே, ட்ரம்பின் அரசு பணியாளர்களின் துணை தலைவர் ஸ்டீபன் மில்லரின் மனைவி (Katie Miller) கேட்டி மில்லர், விரைவில் என்று தலைப்பிட்டு, அமெரிக்கக் கொடியின் நிறத்தில் கிரீன்லாந்து வரைப் படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அமெரிக்காவில் உள்ள டென்மார்க் தூதர் ஜெஸ்பர் மோலர் சோரன்சன், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான டென்மார்க்கின் ஒருமைப்பாட்டுக்கு உரிய முழு மரியாதை எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது குறித்த அச்சுறுத்தல்களை ட்ரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டென்மார்க்கின் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் வலியுறுத்தியுள்ளார்.
கேட்டி மில்லரின் பதிவை மரியாதையற்றது என்று விமர்சித்துள்ள கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே கட்டியெழுப்பப்படுகின்றன என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பீதி அடைவதற்கோ அல்லது கவலைப்படுவதற்கோ எந்தக் காரணமும் இல்லை என்றும், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும், நாட்டின் எதிர்காலம் சமூக ஊடகப் பதிவுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை என்றும் ஃபிரடெரிக் நீல்சன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், அதிபர் கிளாடியா ஷீன்பாம் கட்டுப்பாட்டில் மெக்சிகோ இல்லை என்று கூறியுள்ள ட்ரம்ப், போதைப்பொருள் கும்பலால் மெக்சிகோ அரசு நடத்தப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பிற நாடுகள் மீது செலுத்தும் ராணுவ நடவடிக்கை மூலம் அரசுகளை மாற்றுவது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















