எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்குப் பயங்கரவாத பயிற்சிகள் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூரில்,பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கிவந்த உள்ள பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் மற்றும் பயங்கரவாத பயிற்சி தளங்களைத் தாக்கி தரைமட்டமாக்கியது இந்தியா. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் முக்கிய விமானப் படைத் தளங்களையும் இந்தியா தாக்கி அழித்தது.
மேலும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள இந்தியா, ரத்தமும் தண்ணீரும் ஒன்றாக பாய முடியாது என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டது.
இதனையடுத்து, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள், பெண் ஜிகாதிகளை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. மேலும், WHITE COLLAR பயங்கரவாதிகளையும் உருவாக்கத் தொடங்கியது. சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத கார் குண்டு வெடிப்பிலும் டாக்டர்கள் ஜிகாதிகளாக செயல்பட்டது கணடுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவத்தின் தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையால் எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுக்கப்பட்டுள்ளன. மீறி எல்லை தாண்டும் பயங்கரவாதிகள் வேட்டையாடப் படுகின்றனர்.
இந்நிலையில், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு நீருக்கடியில் மறைந்திருக்கக்கூடிய ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது.
இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பாகிஸ்தானில் இருந்து,படகு மூலம் மும்பைக்கு வந்து,2008-ல் கொடூரமான மும்பை பயங்கரவாதத் தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரிலும் நீச்சல் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற தண்ணீர் சார்ந்த பயிற்சி நடவடிக்கைகள் பெருமளவில் நடைபெற்று வருகின்றன.
தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பயிற்சி மற்றும் நீச்சல் விளையாட்டு பயிற்சி என்ற போர்வையில் , போலி போஸ்டர்களுடன், பயங்கரவாத பயிற்சிகள் வெளிப்படையாக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் jammu kashmir united movement பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதிகளான ரிஸ்வான் ஹனிஸ் மற்றும் அமீர் ஜியா ஆகியோர் இந்த தண்ணீர் பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்று மேற்பார்வையிடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளன.
இந்தப் பயிற்சிகள் மீட்புப் பணிகளுக்கோ பொழுதுபோக்கு விளையாட்டோ அல்ல என்றும், மாறாக ஊடுருவல் மற்றும் கடல்சார் பயங்கரவாத தாக்குதல்களுக்கான போர் தயார்நிலை பயிற்சிகள் என்று பாதுகாப்பு வல்லுநர்கள்தெரிவிக்கின்றனர்.
இது நாட்டுக்கு ஒரு தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தலாகவும் குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற எல்லையோர மாநிலங்களுக்கு அபாய எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.
நேபாளம், மற்றும் வங்கதேசம் வழியாகவும், கடல் வழியாகவும் இந்தியாவுக்குள் ஊடுருவ புது வழிகளை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாகவும் உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப ஆண்டுகளில் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் அரசியல் ஸ்திர தன்மை குலைந்துள்ளது. பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு வசதியாகவும் இந்தியாவுக்கு சவாலாகவும் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
















