சென்னை தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் திமுக-வினர் தன் மீது நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு, பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கருத்தை கருத்தால் எதிர்கொள்ள திராணியில்லாத தி.மு.க-வினர், தொலைக்காட்சி விவாதத்தில் வன்முறையை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எழும்பூரிலுள்ள தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் மற்றும் போலீசார் முன்னிலையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவின் உச்சகட்டம் என விமர்சித்துள்ள அவர், தன் மீதும் தன்னை காக்க முற்பட்ட 20-க்கும் மேற்பட்ட இளைஞரணி நிர்வாகிகள் மீதும், திமுக கூலிப்படை நடத்திய கொலைவெறித் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மின் இணைப்பை துண்டித்துவிட்டு தாக்கப்போகிறோம் என்பதை, திமுக குண்டர்கள் போலீசாரிடமே கூறிவிட்டு தாக்கியது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள எஸ்.ஜி சூர்யா, காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல, குண்டர்களை ஏவிவிட்டு அரசியல் செய்யும் திமுக-வின் போக்கு ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என தெரிவித்துள்ள எஸ்.ஜி சூர்யா, பாதிக்கப்பட்ட தங்கள் இளைஞரணி நிர்வாகிகள் சிந்திய ரத்தத்திற்கு திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















