கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்று டென்மார்க் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் தெளிவாக கூறிய பிறகும்,அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்நாட்டை கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளார். கிரீன்லாந்து மக்களுக்குப் பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் அரசு சதி திட்டம் வகுத்து வருவதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையாக அமெரிக்க அதிபரான போதே டென்மார்க்கின் தன்னாட்சி பகுதியாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் சேர்க்கும் தனது விருப்பத்தை ட்ரம்ப் வெளிப்படுத்தி இருந்தார்.
இரண்டாவது முறையாக அதிபரானதும், கிரீன்லாந்தை கைப்பற்றுவதில் அதி தீவிரம் காட்டிவருகிறார். கடந்த வாரம் வெனிசுலா அதிபரையும் அவரது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்த ட்ரம்பின் பார்வை கிரீன்லாந்து பக்கம் திரும்பி இருக்கிறது . நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவது அவசியம் என்று கூறியுள்ள ட்ரம்ப், அதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்றும் தெரிவித்திருந்தார்.
நேட்டோவில் டென்மார்க்கும் இருக்கும் நிலையில், அந்நாடு மீது அமெரிக்கா ராணுவத்தைப் பயன்படுத்துவது நேட்டோ அமைப்பையே முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெட்ரிக்ஸன் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே கிரீன்லாந்தில் அமெரிக்க ராணுவம் வந்தால் கேள்வியே கேட்காமல் சுட்டுத் தள்ளிவிடுவோம் என்றும், அதன் பிறகே என்னவென்று கேள்வி கேட்போம் என்றும் டென்மார்க் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் கிரீன்லாந்து ஆசையைக் கண்டித்து டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்றும், அந்நாடு அந்நாட்டு மக்களுக்கே சொந்தம் என்று கூறிய கிரீன்லாந்தின் பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், கையகப்படுத்துவது அல்லது இணைப்பு என்பதைப் பகிரங்கமாக மறுத்தார்.
இந்தச் சூழலில், இராணுவத்தைப் பயன்படுத்துவது, இராஜதந்திர வழிகளைப் பின்பற்றுவது என்பதுடன் கிரீன்லாந்தில் வாழும் 57000 மக்களுக்கும் பணத்தாசை காட்டவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. கிரீன்லாந்து மக்கள் ஒவ்வொருவருக்கும் 8 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை மொத்தமாகப் பணம் கொடுத்து, அதாவது மொத்தம் சுமார் 50,000 கோடி ரூபாய் கொடுத்து அம்மக்களை அமெரிக்காவுடன் இணையச் சம்மதிக்க வைக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் ஆலோசனைகள் நடந்துள்ளன.
பணத்தை நேரடியாக எப்படி கொடுப்பது, எப்போது கொடுப்பது ? என்ன நிபந்தனைகளின் பேரில் கொடுப்பது ? என்பன போன்ற விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டென்மார்க்கின் பொருளாதார ஆதரவை நம்பியிருக்கும் கிரீன்லாந்து மக்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்துவது நல்லதல்ல என்றும் சில வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாகக் கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், இப்படிப்பட்ட கற்பனைகள் எதுவும் வேண்டாம் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அமெரிக்காவைச் சாடியுள்ளார். சில பசிபிக் நாடுகளுடன் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்திருந்தாலும், அவை எல்லாம் ,சுதந்திர நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, முதலில் கிரீன்லாந்து டென்மார்க்கிலிருந்து பிரிந்து சுதந்திர நாடாக வேண்டும்.
அதற்காகவே இப்போது அமெரிக்கா கிரீன்லாந்து மக்களுக்குப் பணம் கொடுத்து டென்மார்க்கிலிருந்து பிரிக்க முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. டென்மார்க்கிலிருந்து முழுமையான சுதந்திரத்துக்கு ஆதரவு இருந்தாலும் கிரீன்லாந்தின் பொருளாதார நெருக்கடியால் பொது வாக்கெடுப்பு நடத்தப்படாமலே உள்ளது.
பெரும்பாலான கிரீன்லாந்து மக்கள் அதிக சுதந்திர நாடாக இருக்க விரும்பினாலும், யாரும் அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற விரும்பவில்லை என்பதையும் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
நாட்டின் அதிபராக இருந்தாலும் ரியல் எஸ்டேட் அதிபராகவே செயல்படும் ட்ரம்ப் நடவடிக்கைகள், புவிசார் அரசியலில் பெரும் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன.
















