கொடைக்கானல் மலைப்பகுதியில் வாகனங்களுக்கான சுங்கவரிக்கட்டணம் அதிகரித்திருப்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுங்கவரிக் கட்டணத்தை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதில் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் பரவலாக எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் இருந்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி செல்லும் இடமாகவும் கொடைக்கானல் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு சுங்கவரிக் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைக்கு செல்லக்கூடிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நிலையில், புதிய சாலைகளை போடவோ அல்லது இருக்கும் சாலைகளை செப்பனிடவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், முன்னறிவிப்பின்றி சுங்கவரிக்கட்டணத்தை உயர்த்தியிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், ஆளுங்கட்சி அரசியல்வாதிகளும் நாள்தோறும் பயணிக்கும் சாலையை சீரமைக்கக் கோரி பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் கூட வேகமாக செல்ல முடியாத அளவிற்கு காட்சியளிக்கும் சாலைக்கு சுங்கவரியை உயர்த்துவது ஏன்? என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. சுங்கவரியை உயர்த்துவதில் செலுத்தும் கவனத்தை சாலைகளை சீரமைப்பதிலும் காட்ட வேண்டும் எனவும் உள்ளூர் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்
















