இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லைத் தொட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் மற்றும் நம்பகத் தன்மையற்ற சீனா ஆகியவற்றுக்கு எதிராக, வர்த்தகம், பாதுகாப்பு துறைகளில் ஆசிய வல்லரசான இந்தியாவுடன் ஜெர்மனி கை கோர்த்துள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியை அங்கீகரித்த முதல் நாடுகளின் குழுவில் இந்தியாவும் ஒன்று. 1951-ல் புதியதாக உருவாக்கப்பட்ட ஜெர்மனியுடன் தூதரக உறவுகளைத் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தியாவும் ஜெர்மனியும் தூதரக உறவுகளையும், வர்த்தகக் கூட்டாண்மையின் 25 ஆண்டுகளையும் கொண்டாடும் வேளையில், ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் இரண்டு நாட்கள் அரசு பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இது அதிபராகப் பதவியேற்றபிறகு ஃபிரெட்ரிக் மெர்ஸ் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம். பிரதமர் மோடியைப் ஃபிரெட்ரிக் மெர்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் இடம்பெயர்வு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட முக்கிய துறைகளில் நிலையான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான செயல் திட்டங்கள்குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப் பட்டுள்ளது. முன்னதாக, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையேயான தொடர்பை வலியுறுத்தும் விதமாக, சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர்.
2024-ல் மொத்த இருதரப்பு வர்த்தகம் 33.40 பில்லியன் டாலராக இருந்தது, இது ஒரு சாதனையாகும். இதில் ஜெர்மனி 18.31 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும், இந்தியா 15.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.
சர்வதேசஅளவில் இந்தியாவில் ஒன்பதாவது பெரிய முதலீட்டாளராக ஜெர்மனி திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் ஜெர்மனியின் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
இந்திய-பசிபிக் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு எனத் தரங் மற்றும் மிலன் போன்ற கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும், இந்திய-பசிபிக் வரிசைப்படுத்தல் சுழற்சியின் ஒரு பகுதியாக ஜெர்மன் கடற்படையின் போர்க்கப்பலும், போர் ஆதரவுக் கப்பல்களும் இந்தியாவுக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கான ஏற்றுமதி அனுமதி கட்டமைப்பைப் புதுப்பிக்கும் மசோதாவுக்குக் கடந்த செப்டம்பரில் ஜெர்மனி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் விமான மின்னணுவியல், சென்சார்கள், மின்னணுப் போர் மற்றும் பாதுகாப்புத் தகவல் அமைப்பு கூறுகள் ஆகியவற்றில் ஜெர்மனி இந்தியாவுடன் தொழில்நுட்ப பகிர்வை எளிதாக்கியுள்ளது. முக்கியமாக, இந்திய கடற்படையின் கடலுக்கடியில் போர் திறனை மேம்படுத்தும் ப்ராஜெக்ட்-75I இன் கீழ் 72,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜெர்மனியின் டைப்-214 அடுத்த தலைமுறை (214NG) நீர்மூழ்கிக் கப்பல் உற்பத்திக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் 1921, 1926 மற்றும் 1930 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனிக்குப் பயணம் மேற்கொண்ட வரலாற்றுத் தொடர்பின் தொடர்ச்சியாக இன்று ஹைடெல்பெர்க், ஹம்போல்ட், பெர்லின் மற்றும் பான் போன்ற பல முக்கிய ஜெர்மன் பல்கலைக்கழகங்களில், இந்திய செவ்வியல் மொழிகள் மற்றும் இலக்கியங்களுக்காகப் படிப்புகள் உள்ளன.
மூன்று ஆண்டுகளாகப் பொருளாதார மந்தநிலையில் சிக்கி, திறமையான தொழிலாளர்களையும் தீவிரமாகத் தேடி வந்த ஜெர்மனி, இந்தியர்களுக்கான கதவுகளைத் திறந்து வைத்துள்ளது.
ஜெர்மனியில் 300,000க்கும் மேல் இந்திய வம்சாவளியினர் உள்ளனர். மேலும், ஜெர்மனியில் வசிக்கும் 50,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள், கலாச்சாரத் தூதுவர்களாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் தேவையான தொழில்நுட்பத் திறன்களை வழங்கும் (brain banks ஆக செயல்படுகின்றனர்.
உறுதியான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் (BIT) இருநாடுகளுக்கும் இடையே இல்லாதது, பல்வேறு நீண்ட காலத் திட்டங்களைத் திட்டமிடுவதையும் செயல்படுத்துவதையும் தாமதப்படுத்துகிறது.
ஜெர்மனியின் தொழிலாளர் ஒழுங்குமுறை வழிமுறைகள், அந்நாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதில் சிக்கலை ஏற்படுத்துகின்றன.
சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடும் நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஜெர்மனியின் நிலைப்பாடும் வெவ்வேறாக உள்ளன.
ஷெங்கன் விசாக்களை வழங்குவதில் உள்ள செயலாக்கத்தில் ஏற்படும் தாமதங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருதரப்பு உறவைப் பாதிக்கின்றன.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், ஆழமான ஒத்துழைப்பை உருவாக்குவதில் இருநாடுகளும் நெருங்கி வந்துள்ளன.
















