அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கு இந்தியா 30% வரி விதித்திருப்பதை எதிர்த்து, அமெரிக்க செனட்டர்கள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு டகோட்டாவைச் சேர்ந்த கெவின் கிராமர் மற்றும் மொன்டானாவைச் சேர்ந்த ஸ்டீவ் டெய்ன்ஸ் ஆகிய 2 செனட்டர்கள் அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அமெரிக்க மஞ்சள் பட்டாணி மீது இந்தியா விதித்துள்ள 30 சதவீத இறக்குமதி வரி நியாயமற்றது என்று கூறியுள்ளனர்.
இந்த வரி விதிப்பு கடந்த அக்டோபர் 30ம் தேதி அறிவிக்கப்பட்டு நவம்பர் ஒன்றாம் தேதி அமலுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் அமெரிக்கா இந்தியப் பொருட்கள் மீது 50% வரை வரி விதித்தது. அதற்குப் பதிலடியாகவே இந்தியா பருப்பு வரி உயர்வு முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வரி விதிப்பு குறித்து இந்திய அரசாங்கம் பெரிய அளவில் விளம்பரம் செய்யவில்லை, இருப்பினும், இது அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு இந்தியா கொடுத்த அமைதியான பதிலடி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
















