‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் மூலம், அந்நாட்டுடன் உறவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் முன்னெடுத்த தூதரக நடவடிக்கைகள் அம்பலமாகியுள்ளன
பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, கடந்த 2025-ம் ஆண்டு, மே மாதம் ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இந்த நடவடிக்கை பாகிஸ்தானுடைய படை பலத்தின் அவல நிலையை தோலுரித்து காட்டியதுடன், இந்தியாவின் ஆற்றல் மிகுந்த போர் திறனையும் உலக நாடுகளுக்கு பறைசாற்றியது. இந்த தர்மசங்கடமான சூழ்நிலைக்கு பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு இஸ்லாமாபாத்திலிருந்து அனுப்பபட்ட கொள்கை ஆவணங்கள் அடங்கிய மின்னஞ்சல், அந்நாட்டுடன் உறவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் முன்னெடுத்த தூதரக நடவடிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.
குறிப்பாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்த மே 2025 கால கட்டத்தில், அமெரிக்காவுடன் உள்ள உறவுகளை மீண்டும் சீரமைக்க பாகிஸ்தான் திட்டமிட்ட முயற்சிகளை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, அந்த ஆண்டு மே 14-ம் தேதி பரப்புரை மற்றும் தூதரக நடவடிக்கைகள் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்பட்டன. அந்த நாளில், முன்னாள் அமெரிக்க தூதராக பணியாற்றிய PAUL W.JONES, வாஷிங்டனில் உள்ள சட்ட மற்றும் பரப்புரை நிறுவனத்தின் ஆலோசகராக இருந்து, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரியான ELIZABETH K.HORST-க்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். அதில் “புதுப்பிக்கப்பட்ட பாகிஸ்தான் – அமெரிக்க உறவு” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு பக்க கொள்கை ஆவணமும் இணைக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவில் பதிவாகியுள்ள சட்ட மற்றும் பரப்புரை நிறுவனங்களின் தகவல்கள் நடந்த இவை அனைத்தையும் அடிக்கோடிட்டு காட்டியுள்ளன.
இந்த நிறுவனம் பாகிஸ்தான் அரசின் பதிவு செய்யப்பட்ட பிரதிநிதியாக, வெளிநாட்டு முகவர் பதிவு சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு சட்டப்படி செயல்படுகிறது என ஜோன்ஸ் விளக்கியிருந்தார். நிதி நடவடிக்கை பணிக்குழு தொடர்பாக தனியான பேச்சுவார்த்தை தேவை என்றும் அவர் கோரியிருந்தது, தீவிரவாத நிதி மற்றும் நிதி ஒழுங்குமுறை மீதான சர்வதேச கண்காணிப்பை பாகிஸ்தான் எவ்வளவு கவலையுடன் எதிர்கொள்கிறது என்பதைக் எடுத்துரைக்கிறது.
மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டிருந்த கொள்கை ஆவணத்தில், பாகிஸ்தான் தன்னை அமெரிக்காவுக்கு பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் புவியியல் அரசியல் ரீதியாக பயன்படும் கூட்டாளி என வெளிப்படையாக அறிவித்திருந்தது. அமெரிக்காவிலிருந்து விவசாயம் மற்றும் எரிசக்தி சார்ந்த பொருட்களை அதிக அளவில் இறக்குமதி செய்யவும், அமெரிக்க தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் சுங்க வரிகளை குறைக்கவும், இருநாட்டு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சமநிலையற்ற நிலையை விரைவில் சரிசெய்யவும் தயாராக இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. அமெரிக்காவுடன் பாகிஸ்தானுக்கு இருக்கும் வர்த்தக நிலுவை 3 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருப்பதாகவும், அந்த இடைவெளியை குறுகிய காலத்திலேயே நீக்க முடியும் என்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு சிறப்பு முதலீட்டு வசதி கவுன்சில் மூலம், விரைவான அனுமதி மற்றும் அரசின் ஆதரவு வழங்கப்படும் என கொள்கை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கவுன்சிலுக்கு பிரதமரும், ராணுவத் தளபதியும் இணைந்து தலைமை வகிப்பதாக குறிப்பிடப்பட்டிருப்பது, நாட்டின் பொருளாதார முடிவுகளை தீர்மானிப்பதில் ராணுவம் வகிக்கும் முக்கிய பங்கு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் காட்டியுள்ளது. அதேசமயம், செம்பு, லித்தியம், கோபால்ட், அரிய பூமி கனிமங்கள் போன்ற முக்கிய கனிம வளங்கள் நிறைந்த நாடாக தன்னை முன்னிறுத்திக்கொண்டுள்ள பாகிஸ்தான், இத்துறையில் அமெரிக்காவுடன் இருதரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து செயல்படவும், ஆஃப்கானிஸ்தானில் விட்டுச் செல்லப்பட்ட அமெரிக்க ஆயுதங்களை மீட்க உதவவும் பாகிஸ்தான் தயாராக இருப்பதாகவும் அந்த ஆவணத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மேற்கொண்ட இந்த முயற்சிகள் சில வாரங்களிலேயே பலன் அளித்தன. ஜூன் 2025-ல், ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் வெள்ளை மாளிகையில் மதிய உணவுக்கு அழைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முக்கிய கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பு அறிவிப்புகள் வெளியாகின. இதன் மூலம், வாஷிங்டன், பாகிஸ்தானில் மூலோபாய உறுதிகளை நிறைவேற்றக் கூடிய நம்பகமான அமைப்பாக ராணுவத்தை கருதுகிறது என்பதும் உறுதியாகியுள்ளது.
















