மதுரை LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள LIC அலுவலகத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில், பெண் முதுநிலை கிளை மேலாளர் கல்யாணிநம்பி, தீயில் கருகி உயிரிழந்த நிலையில், காயமடைந்த உதவி நிர்வாக அதிகாரி ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பான விசாரணையின்போது ராம் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் கேள்வி எழுப்பியபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. ராம் தொடர்பான ஆவணங்களில் முறைகேடு இருப்பதை கண்டறிந்த கல்யாணிநம்பி, அவரிடம் பல நாட்களாக விசாரித்து வந்துள்ளார்.
இதனால் அச்சமடைந்த ராம், ஆவணங்களை தீயிலிட்டு எரித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறைக்கு கல்யாணிநம்பி தகவலளிக்க முயன்றதால் ஆத்திரமடைந்த ராம், கல்யாணிநம்பியை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்துள்ளார்.
இதையடுத்து ராமை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















