திமுக மற்றும் ‘இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா? என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாஜகவின் தகவல் தொழில்நுட்பத் துறை தேசியப் பொறுப்பாளரான அமித் மால்வியாவுக்கு எதிரான வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் கிளை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய வெறுப்புப் பேச்சைக் கேள்வி கேட்பதோ அல்லது அதற்குப் பதிலளிப்பதோ ஒரு குற்றச் செயல் ஆகாது என்றும், அது சட்ட செயல்முறையைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முக்கியமாக, கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக திமுக மற்றும் திராவிடர் கழகம் இந்து மதத்தின் மீது காட்டி வரும் பகைமையின் நீண்டகாலப் போக்கையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெறுப்புப் பேச்சைத் தூண்டியவர் மீது தமிழ்நாட்டில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் அவர் தப்ப விடப்பட்ட நிலையில், அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் அல்லது கேள்வி கேட்டவர்கள் திமுக அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற அப்பட்டமான அநீதியையும் நீதிமன்றம் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதி வென்றுள்ளது. திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையால் நாகரிக நம்பிக்கையை அணைத்துவிடவும் முடியாது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
திமுக மற்றும் ‘இண்டி கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நீதிபதி ஸ்ரீமதிக்கு எதிராக ஒரு பதவி நீக்கத் தீர்மானத்தைக் கொண்டு வருவார்களா? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
















