கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் – மங்களூரு, திருவனந்தபுரம் – தாம்பரம், திருவனந்தபுரம் – சர்லப்பள்ளி ஆகிய மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்களையும், திருச்சூர் – குருவாயூர் இடையே புதிய பயணிகள் ரயிலையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளதாகவும், கேரளாவின் ரயில் இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட்அப் மையமாக மாற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். கேரளாவிலிருந்து, நாடு முழுவதும் உள்ள ஏழைகளின் நலனுக்காக ஒரு முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, பிஎம் ஸ்வநிதி கடன் அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் பிஎம் ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகளால் வங்கிக் கடன்களைப் பெற முடியும் என கூறினார்.
















