கிரீன்லாந்தைக் கைப்பற்ற தீவிரம் காட்டிவரும் அமெரிக்க அதிபா் ட்ரம்ப், ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் அடுக்கடுக்கான பொய்களை அள்ளிவீசி இருக்கிறார்
வட அமெரிக்காவின் ஒரு பகுதிதான் கிரீன்லாந்து என்று குறிப்பிட்ட ட்ரம்ப், சொந்த உரிமையைத் தான் கேட்பதாகவும், குத்தகைக்கு எடுத்த டென்மார்க் அதை தர மறுப்பது நியாயமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிரீன்லாந்தை கைப்பற்ற அமெரிக்கா, ராணுவத்தைப் பயன்படுத்த தேவை இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் திருப்பிக் கொடுத்ததாக ட்ரம்ப் கூறினாலும், உண்மையில் கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு எப்போதும் சொந்தமானதாக இருக்கவில்லை.
1933-ல், சர்வதேச நீதிமன்றம், கிரீன்லாந்து டென்மார்க்குக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளித்துள்ளது. பிறகு 1941-ல் டென்மார்க் ஜெர்மனியிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமே அமெரிக்காவுடன் டென்மார்க் ஒப்பந்தம் ஏற்படுத்தியது.
அந்த ஒப்பந்தத்தில், கிரீன்லாந்தில் ராணுவத் தளங்கள் அமைப்பதற்கும், அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்துவதற்கும் மட்டுமே டென்மார்க் அனுமதி அளித்துள்ளது. அத்தீவின் இறையாண்மை குறித்து எந்த வரியும் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை. எனவே கிரீன்லாந்து ஒருபோதும் அமெரிக்காவின் சொந்த நிலமாக இருந்ததே இல்லை.
இரண்டாவது பொய்யாக அதிபர் ட்ரம்ப் நேட்டோவை விமர்சித்து, நேட்டோவின் செலவில் கிட்டத்தட்ட 100 சதவீதமும் அமெரிக்காவே செலுத்துகிறது என்று கூறியுள்ளார்.
உண்மையில் நேட்டோ நாடுகள் செலவழித்த மொத்தத் தொகையில் அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவு சுமார் 70 சதவீதமாக தான் இருந்தது. அதுவும் 2024-ல் 65 சதவீதமாக குறைந்தது. 2025-ல் 62 சதவீதமாக குறைந்தது.
அடுத்த நேட்டோ உறுப்புநாடுகள் 2 சதவீதம் கூட இதுவரை செலுத்தவில்லை என்றும், தான் சொன்ன பிறகுதான் 5 சதவீதம் செலுத்துவதாக ட்ரம்ப் கூறியிருந்தார். அதுவும் உண்மையில்லை
அனைத்து நேட்டோ உறுப்பு நாடுகளும் முதல் முறையாக தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 2 சதவீதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவிடத் திட்டமிட்டிருந்தன. மேலும் அடுத்த பத்தாண்டுகளில் அதை 5 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளன.
கூடுதலாக, நேட்டோவிடமிருந்து அமெரிக்கா ஒருபோதும் எதையும் பெற்றதில்லை என்றும், நேட்டோவிடம் அமெரிக்கா எப்போதும் எதையும் கேட்டதில்லை என்றும் அப்பட்டமான பொய்யைச் சொல்லியுள்ளார்.
கூட்டுப் பாதுகாப்பு என்ற கொள்கைக்காக உருவாக்கப்பட்ட நேட்டோவின் அமைப்புச் சட்டத்தின் 5வது பிரிவு, ஒரு நேட்டோ உறுப்பு நாட்டின் மீதான ஆயுதத் தாக்குதல், அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்று கூறுகிறது.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, நேட்டோவின் இந்த 5வது சட்ட பிரிவை செயல்படுத்திய ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் மீதான போரில் அமெரிக்காவுக்கு டென்மார்க் உட்பட நேட்டோ நாடுகள் அனைத்தும் தங்கள் இராணுவ வீரர்களையும் ஆயுதங்களையும் வழங்கியுள்ளன.
குறிப்பாக அமெரிக்காவுக்காக ஆப்கானிஸ்தானில் இறந்த வீரர்களில் டென்மார்க் வீரர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
போதா குறைக்குப் போகிற போக்கில் , அதிபர் ட்ரம்ப் காற்றாலை ஆற்றலை ஒரு புதுமையான பசுமை மோசடி என்று குறிப்பிட்டுள்ளார்.
சீனா நிறைய காற்றாலைகளைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பதாக கூறிய ட்ரம்ப், சீனாவில் எந்தக் காற்றாலைப் பண்ணைகளையும் தன்னால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் உலகின் மிகப்பெரிய காற்றாலைப் பண்ணை சீனாவின் Gansu நகரில் உள்ளது. வேறு எந்த நாட்டையும் விட சீனா தான் அதிக காற்றாலை ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 2024 ஆம் ஆண்டில் மட்டும் காற்றிலிருந்து 997 terawatt மின்சாரத்தைச் சீனா உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
அடுத்ததாக, கடந்த ஓராண்டில் தாம் அமெரிக்காவுக்கு 18 ட்ரில்லியன் டாலர்கள் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக பெருமை பேசியுள்ளார்.
ஆனால், கடந்த ஜனவரி முதல் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த மொத்த முதலீடுகள் 9.6 ட்ரில்லியன் டாலர்கள் என்று வெள்ளை மாளிகையின் இணையத் தளத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கடந்த வாரம், கிரீன்லாந்து சர்ச்சை தொடர்பாக 8 ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வரி விதித்ததும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சர்வதேச வர்த்தகக் குழு, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்விட்சா்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் ஆண்டு கூட்டத்தில் இத்தனை பொய்களை கூச்சமே இல்லாமல் பேசிய அதிபர் ட்ரம்ப், உலகில் எட்டுப் போர்களைத் தீர்த்து வைத்ததாக அதே பழைய பாட்டையும் பாடியுள்ளார்.
















